ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் தீர்ப்பு: என்ன கிடைக்கும். என்ன கிடைக்காது

ராணுவத்தில் களத்தில் இறங்கி நேரடியாக சண்டையிடுதல் அல்லாத பணிகளில் (non combative roles) பெண்களை நிரந்தர கட்டளைப் பணியில் ஈடுபடுத்தலாம் (permanent commission) என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை, ஓடும் ஆற்றில் வீசப்பட்ட ஒரு பெரும் பாறையைப் போலவே கருத வேண்டும்.


இது ஆற்றின் போக்கை மாற்றப் போவதில்லை என்றாலும் நீரோட்டத்தில் நிச்சயம் ஒரு பெரிய சலசலப்பை உண்டாக்கும்.



நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழங்கிய தீர்ப்பை 'முழுமனதோடு வரவேற்கிறேன்' என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


"இந்தத் தீர்ப்பு எங்களை நெடுந்தூரம் இட்டுச் செல்கிறது. இது வரையறை இல்லாத ஒரு பிரதேசம். எனினும் இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால் நிச்சயம் நிறைவேற்றப்படும். பெண் அதிகாரிகளை பணியில் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது ராணுவத்தின் விருப்பம் அல்ல. 1992 முதலே படிப்படியாக பெண்களை பணிகளில் ஈடுபடுத்தி வருகிறோம். இந்த தீர்ப்பு வரும் வரை கூட இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மெதுவாகத் தோன்றினாலும், மிகவும் விவேகமாக இருக்கவே விரும்புகிறோம்," என்று பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.